''மாவட்ட ஊராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளும் பணிகளை பொறுத்து மாவட்ட ஊராட்சியே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கலாம் என்று இருந்த உச்சவரம்பு தற்போது இருபது லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது'' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் மூலம் பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள், திட்டம் தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் தொடர்பான நிபந்தனைகள் ஆகியவை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு திருத்தம் செய்து புதிய அரசாணை எண் 203, ஊரக வளர்ச்சித்துறை, நாள் 20.12.2007 மூலமாக வெளியிடப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிமுறைகளில், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் தமது பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசு நிதிகளின் மூலம் செயல்படுத்தும் பணிகளுக்கான மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி கிராம ஊராட்சிகளின் பொது நிதிப்பணிகளை பொறுத்து ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு கிராம ஊராட்சியே நிர்வாக அனுமதி வழங்கலாம் என்று இருந்த உச்சவரம்பு தற்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளும் பணிகளைப் பொறுத்து, ஊராட்சி ஒன்றியம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கலாம் என்று இருந்த உச்சவரம்பு தற்போது பத்து லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளும் பணிகளை பொறுத்து மாவட்ட ஊராட்சியே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கலாம் என்று இருந்த உச்சவரம்பு தற்போது இருபது லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களது கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் ஊரக உள்ளாட்சிகள் வளர்ச்சிப் பணிகளை தமது பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளுவதற்கு என உள்ள முந்தைய நடைமுறையை எளிமைப்படுத்தி நிர்வாக அனுமதி வழங்குவதற்கான நிதி வரம்பினை உயர்த்தி அதிக அதிகாரம் வழங்கும் வகையிலும் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.