வெ‌ற்‌றியின் மூல‌ம் மோடி‌யி‌ன் அ‌நியாய‌த்தை மறை‌க்க முடியாது: ஜ‌ி.கே.வாச‌ன்!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (16:06 IST)
''வெற்றியின் மூலம் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க முடியாது'' எ‌ன்று ம‌த்‌திய இணை அமை‌ச்ச‌ர் ஜ‌ி.கே.வாச‌‌ன் கூ‌றினா‌ர்.

சோனியா கா‌ந்‌தி பிறந்தநாள், காங்கிரசின் 123-ம் ஆண்டு விழா, மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது.

விழா முடி‌ந்தது‌ம் ம‌த்‌திய இணை அமை‌ச்ச‌ர் ஜி.கே.வாசன் செ‌ய்‌தியாளர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இக்கால கட்டத்தில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை மக்களிடம் விளக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் இப்பணியில் ஈடுபடுவர். அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளை கலந்து பேசித்தான் நிறைவேற்றப்படுகின்றன.

ஓரிரு மாநிலங்களில் பார‌திய ஜனதா வெற்றி பெற்றதால் மத்தியில் ஆட்சியை அக்கட்சி பிடிக்கும் என்பது தவறான கணிப்பு. வெற்றி மூலம் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க முடியாது எ‌ன்று ம‌த்‌திய இணை அமை‌ச்ச‌ர் ஜ‌ி.கே.வாச‌‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்