2000-ம் ஆண்டில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் வேளாண்மை கல்லூரி பேருந்து ஒன்றுக்கு தீ வைத்ததில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு சேலம் முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதுதவிர, 25 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். ஆனால் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த மாதம் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து, சேலம் முதன்மை நீதிமன்றம் 3 பேரையும் தூக்கில் போட தேதி நிர்ணயம் செய்ய, கோவை மத்திய சிறைச்சாலைக்கு உத்தரவிட்டது. ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலையில் 3 பேரையும் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. இதனிடையே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, ஜனவரி 10ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சேலம் முதன்மை நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்த கருத்தை அரசு இன்று தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், அரசு தலைமை வழக்கறிஞர் ராஜ இளங்கோ இன்று நீதிபதிகள் முன்னிலையில், தூக்குத் தண்டனை குறித்த புதிய தகவலை தெரிவித்தார்.
கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவு நகலை நீதிபதிகளிடம் அளித்த ராஜ இளங்கோ இது பற்றி தெரிவித்ததாவது:
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து சேலம் மாவட்ட முதலாவது முதன்மை நீதிமன்றம் 16.2.2007 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தூக்குத் தண்டனை பெற்ற மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் துணை பதிவாளர் அலுவலகத்தின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டது. எனவே உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மனு பைசல் ஆகும் வரை தூக்குத் தண்டனையை தள்ளிவைக்க கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவு குறித்த தகவல் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மனோஜ் பாண்டியனிடம் நீதிபதிகள் கருத்து கேட்டனர்.
தூக்குத் தண்டனையை தள்ளிவைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர்களின் மனு பற்றிய முடிவை நீதிபதிகளே அறிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
இதனையடுத்து அரசு தரப்பிலான தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தண்டனையை தள்ளி வைக்க அரசே உத்தரவு பிறப்பித்திருப்பதால் இந்த மனு மீது ஆணை எதையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்துள்ள சிறப்பு அனுமதி மனு பைசலாகும் வரை அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது.