தமிழ்நாட்டில் சேதுசமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்த மதவெறி சக்திகள் முயலுகின்றன. மதவெறி சக்திகளால் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி அரசை நீக்க வேண்டும்; மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்தோம். வரும் மக்களவை தேர்தலில் மதவெறியை எதிர்ப்பதைப் போலவே, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதார கொள்கையையும் நாங்கள் எதிர்ப்போம்.
தற்போது அகில இந்திய அளவில் மதவெறி சக்திகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஒரிசாவில் சமீபத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்த மதவெறி சக்திகள் முயலுகின்றன. மதவெறி சக்திகளால் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. தனது கொள்கைக்கு விரோதமாக வெளிப்படையாகவே பி.ஜே.பி.யை ஆதரித்து வருகிறது. இது நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும்.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு பின்தங்கி உள்ளது. 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க. தொய்வு காட்டுகிறது. தரிசு நிலங்களை அவற்றின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு மக்களுக்கு தர வேண்டும்.
நாங்களும் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம். இவற்றில் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பதை நாங்கள் கூர்ந்து கவனிப்போம். அதன் அடிப்படையில் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். தேசிய அளவில் 3வது அணி அமைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதே போல தமிழகத்திலும் ஒரு மாற்று அணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். எங்களுக்கு தி.மு.க.வுடன் எந்த காலவரையற்ற ஒப்பந்தமும் கிடையாது.
அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை. எனவே பிரதமரின் இலங்கை பயணத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்று வரதராஜன் கூறினார்.