''நம்மைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைதான் முக்கியமே தவிர, அண்டை மாநிலங்களோடு மோதி பிரச்சினையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதல்ல என்பதையும் நான் அப்போதே தெளிவாக்கியிருக்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கேள்வி: இவ்வளவு நாட்களாக தே.மு.தி.க.வை ஒரு கட்சியாக மதிக்காத முதல்வர் கருணாநிதி, இன்றைக்கு என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?
பதில் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு'' என்று கூறியவர் எங்கள் அண்ணா. அந்த அண்ணாவின் கருத்தை என்றைக்கும் மதிக்கக்கூடிய நான், அவரது கட்சியை எப்படி மதிக்காமல் இருப்பேன். மதித்த காரணத்தால் தான் கட்சி தொடங்கிய நாளன்றே வாழ்த்துக் கடிதம் அனுப்பினேன்.
கேள்வி : பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசும் போது கடந்த வருடம் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என்று கூறிய தமிழக முதல்வர் இப்போது மட்டும் எப்படி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்று கேட்டிருக்கிறாரே?
பதில் : டெல்லியில் என்னை செய்தியாளர்கள் சந்தித்த போதும், பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்த போதும் தெளிவாக விளக்கம் கூறியிருக்கிறோம். அதைப் படிக்காமல் இப்போது பொதுக்கூட்ட மேடையில் நின்று கொண்டு அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். நான் டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்தித்த நேரத்தில், பிரதமரே முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து மீண்டும் ஒருமுறை கேரள முதல்வருடன் பேசுங்களேன் எனக் கூறினார். உடனே நான், ஏற்கனவே பல முறை பேசப்பட்டும் எந்த விதமான பயனும் இல்லை, உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தையினால் என்ன பயன் விளையும் என்று கேட்டேன்.
அப்போது இந்தப் பிரச்சினையிலே மிகுந்த அக்கறையோடு உள்ள பிரதமர், பேசிப் பாருங்களேன் என்று மீண்டும் கேட்டுக் கொண்டார். அதற்குப் பிறகும் அதை மறுப்பது நாகரிகமல்ல என்பதால் அந்தப் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டேன். நாகரீகமோ, பண்பாடோ இல்லாதவனாக நான் இருந்திருந்தால் முடியாது என்று ஒரேயடியாக மறுத்திருப்பேன். அப்படி பேச்சுவார்த்தை நடத்தியதால தான் அணையில் நீர்க் கசிவு பற்றி தமிழகம், கேரளம் தவிர்த்த மற்ற மாநிலப் பொறியாளர்களைக் கொண்டு கணக்கிடலாம் என்ற கருத்தை தமிழகத்தின் சார்பில் என்னால் கூற முடிந்தது. கேரள முதல்வர் அந்தக் கருத்தை பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையில் பிரச்சினைதான் முக்கியமே தவிர, அண்டை மாநிலங்களோடு மோதி பிரச்சினையை வளர்த்துக் கொள்ள வேண்டு மென்பதல்ல என்பதையும் நான் அப்போதே தெளிவாக்கியிருக்கிறேன்.
கேள்வி: பகுத்தறிவு பற்றிப் பேசுகிறீர்களே, உங்கள் வீட்டில் சாய்பாபாவுக்கு என்ன வேலை என்றும் வைகோ கேட்டிருக்கிறாரே?
பதில்: என்னுடைய பகுத்தறிவு பற்றி இவரது சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. என்னை அறிந்தவர்கள் என் பகுத்தறிவு கொள்கை பற்றி அறிவார்கள். சாய்பாபாவின் வருகையினால் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் என்ன லாபம் என்றுதான் இதில் பார்க்க வேண்டும். என் வீட்டிற்கு வந்ததால் சாய்பாபா நாத்திகராகி விடவில்லை. அவரது வருகை காரணமாக நானும் ஆத்திகனாகி விடவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.