ஈரோடு மாநகராட்சி மேயராக குமார் முருகேஸ் பதவியேற்பு

புதன், 2 ஜனவரி 2008 (12:28 IST)
தமிழ்நாட்டின் எட்டாவது மாநகராட்சியாக மாறிய ஈரோட்டின் மேயராக குமார் முருகேஸ் நேற்று பதவியேற்றார்.

தமிழகத்தின் எட்டாவது மாநகராட்சியாக ஈரோடு நேற்று முறைப்படி உதயமானது. கடந்த 29ம் தேதி ஈரோடு மாநகராட்சி துவக்க விழாவை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

மேயர் பதவியேற்பு விழா நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. காலை 11.30 ம‌ணியள‌வி‌ல், குமார்முருகேஸ் மேயராக பதவியேற்றதற்கான அடையாளமாக கோப்பில் முதல் கையெழுத்திட்டார். மன்ற கூடத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதன்பின், இருக்கையில் அமர்ந்த மேயர் குமார்முருகேஸ் பேசியதாவது, பெரியாரின் கனவை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் டிச‌ம்ப‌ர் 29ம் தேதி ஈரோடு மாநகராட்சியை துவக்கி வைத்தார்.

அறிவித்தபடி மாநகராட்சிக்கு செயல்வடிவம் கொடுத்த முதல்வருக்கு இந்த மாமன்றம் நன்றி கூறிக் கொள்கிறது. மேயர் பதவியை, பெரிய பதவியாக ஏற்காமல், பணியாக ஏற்றுக் கொண்டு, மக்களுக்கு உதவும் வகையிலும் அனைவரும் மெச்சும் அளவுக்கு என் பணியை செய்வேன்.

மாநகராட்சி அந்தஸ்துக்கு தேவையான கட்டமைப்பு, நல உதவிகளுக்கு போதிய நிதி பெறப்படும். முதல்வர் தனது குருவுக்கு மரியாதை செய்தது போல் எனது தலைவருக்கு (முதல்வர்) மரியாதை செய்யும் வகையில் ஈரோடு மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்றுவேன்.

அனைத்து பணியிலும் ஈரோடு அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எ‌ன்று அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்