ரூ.5 லட்சம் லாட்டரி டிக்கெட் விற்ற தந்தை, மகன் கைது!
Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (13:15 IST)
ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் இன்று செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்களின் வீடுகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட், ஒரு கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டை சேர்ந்த சண்முகம் (43), பார்த்தசாரதி (21) என்றும், இருவரும் தந்தை, மகன் என்றும் தெரியவந்தது.