இன்று நடந்த திருப்பூர் மாநகராட்சி தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தொழில் சிறப்பு மிகுந்த நகரத்தில் ஒன்றாக திருப்பூர் விளங்கி வருகிறது. பருத்தி பின்னலாடை தொழிலை பொருத்தவரை இந்தியாவிலேயே 90 விழுக்காட்டிற்கு மேல் திருப்பூரில்தான் உற்பத்தியாகிறது. ஏறத்தாழ 100 கோடி மதிப்பிலான அன்னிய செலாவணியை திருப்பூர் பெற்று தருகிறது.
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது தனது உயிரை நீத்த திருப்பூர் குமரன் பிறந்த ஊரும் இதுதான். இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த திருப்பூரை மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் நீண்ட ஆண்டு காலமாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
தனது முதல் சட்டப் பேரவைக் கூட்டத்திலேயே கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அப்போது முதல்வர் கருணாநிதி கூறும்போது தொகுதி சீரமைப்பு பணி முடிந்ததும் நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார். அதன்படி திருப்பூர் நகராட்சி, மாநகராட்சியாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி 1688-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை நகரங்கள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் திருப்பூர், ஈரோடும் மாநகராட்சிகள் பட்டியலில் இடம் பெறுவதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் புதியதாக பொறுப்பேற்க உள்ள உறுப்பினர்கள் எந்த லட்சியத்திற்காக இந்த மாநகராட்சி தொடங்கப்பட்டதோ அதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 17 ஆயிரத்து 819 பணியிடங்களில் 17 ஆயிரத்து 767 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சி தலைவர்களை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. அவர்களின் பரிந்துரைகளை பரிசீலித்து அதனை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது என்றார் ஸ்டாலின்.