இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை சென்றால் பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படும். இலங்கைக்கு இந்தியா உதவும் நிலை ஏற்படும். அது தமிழர்களுக்கு விரோதமான நிலையை ஏற்படுத்தும்" என்றார்.
மேலும், "இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக முறையில் தொடங்கிய போராட்டம், வேறு வழியில்லாததால் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாறி உள்ளது. இதற்கு அரசியல் தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்காத இலங்கை அரசுக்கு இந்தியா மறைமுகமாக ராணுவ உதவிகளை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இலங்கையின் சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இன்னும் இதை உறுதி செய்யவில்லை.
பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அரசின் அழைப்பை ஏற்கக் கூடாது. இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வற்புறுத்தி 31-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத்துள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் இலங்கை செல்லும் அவரது திட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்த வேண்டும். எந்த நிலையிலும் பிரதமர் இலங்கை சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கக்கூடாது" என்றார் கி.வீரமணி.