தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகள் நாளை முதல் செயல்படத் தொடங்குகின்றன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் திருப்பூர், ஈரோடு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கான தொடக்க விழா நாளை நடக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி தொடக்கவிழா நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடக்கிறது. அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
முதல்வர் கருணாநிதி திருப்பூர் மாநகராட்சியை தொடங்கி வைக்கிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் திரிபாதி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிரஞ்சன்மாடி, மாவட்ட கலெக்டர் நீரஜ் மித்தல், நகராட்சி நிர்வாக அரசு யெலாளர் தீனபந்து, நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
ஈரோடு நகராட்சி தொடக்க விழா நாளை மாலை 4 மணிக்கு ரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்தில் நடக்கிறது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி ஈரோடு மாநகராட்சியை தொடங்கி வைக்கிறார். இலவச நிலம், வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, வரவேற்கிறார். மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தலைமை செயலாளர் திரிபாதி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக அரசு செயலாளர் தீனபந்து, ஈரோடு மாவட்ட கலெக்டர் உதயசந்திரன், நகரமன்றத் தலைவர் குமார் முருகேஷ் உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.