நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஏரி, குளங்கள் பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முழு வீச்சில் அகற்றினர். ஆனால், சிலர் நீதிமன்றத்துக்கு சென்றதால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் 21 நாட்கள் அவகாசம் அளித்து, அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர பொதுப்பணித்துறை முடிவு செய்தது.
இதற்காக, ஏற்கனவே உள்ள தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்ட போது, ஏரி, குளங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்களை 3 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்க முடியும். நீர் நிலை ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றுவதற்கு புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.