திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை துரிதமாக வழங்காத அரசைக் கண்டித்து நாளை மறுநாள் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சரியான முறையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மழை நீர் சூழ்ந்து சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், கடலை உள்ளிட்ட விளை பயிர்கள் பாதிக்கப்பட்டும் இருப்பதன் காரணமாக விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், "தற்போது மழை விட்ட பிறகும் கோரையாறு, பாண்டவை ஆறு ஆகியவற்றில் முதல் முறையாக உடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இவ்விரு ஆறுகளின் உடைப்புக்குக் காரணம் என்னவென்றால், சரியான முறையில் நீர் பகிர்ந்து வழங்காததும், முறையாக தூர் வாரப்படாததுமே ஆகும் எனத் தெரிகிறது.
எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணப் பணிகளை துரிதமாக வழங்காத அரசைக் கண்டித்தும், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகின்ற 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், திருவாரூர் தெற்கு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.