நாகை துறைமுகத்தில் வருகிற ஜுன் மாதத்திற்குள் சுனாமி எச்சரிக்கை கருவி அமைக்கப்படும் என்று துறைமுக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகை துறைமுக அலுவலர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை துறைமுகத்தை தமிழக அரசின் சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி அளித்த ரூ.56.93 கோடி நிதியைக் கொண்டு சிரமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.
"துறைமுகத்தில் வடக்கு நீர் தடுப்பினை சீரமைக்க ரூ.1.81 கோடி, தெற்கு நீர் தடுப்பினை சீரமைக்க ரூ.1.40 கோடி, சரக்கு கையாளும் தளம், மற்றும் உள் சாலைகள் சீரமைக்க ரூ.1.53 கோடி, கருவையாற்றை தூர் வாரும் பணிக்கு ரூ.5.92 கோடி, கடுவையாறு கிழக்கு கரையை அதிர்வு தாங்கும் தடுப்பு சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிக்கு ரூ.8.63 கோடி என மொத்தம் 15 பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 6 பணிகள் முழுவதும் முடிந்துள்ளன. மீதி உள்ள 9 பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் ஜுன் மாதத்திற்குள் முடிந்து விடும்.
துறைமுக விரிவாக்கப் பணிகள் முடிந்து விட்டால் சரக்கு கப்பல்கள் 24 மணி நேரமும் துறைமுகத்திற்கு வந்து செல்லும் சூழ்நிலை உருவாகும். அப்போது நாகை துறைமுகத்தில் இருந்து சமையல் எண்ணை, சிமெண்ட், பொது சரக்குகள் ஏற்றுமதியும், கச்சா எண்ணை, திரவ அமோனியா, நாப்தா, தேங்காய் புண்ணாக்கு இயந்திரங்கள் மற்றும் பொது சரக்குகள் ஆகியவை இறக்குமதியும் செய்யப்படும்.
நாகை துறைமுகம் உலக கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சுனாமிக்கு பிறகு நாகை துறைமுகம் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் கடல் அலை ஆய்வு மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது." எனறார் அன்பரசன்.