தமிழகத்தில் காவல்துறையின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கேரளத்திற்கு இடம்பெயரும் நக்சலைட்டுகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக கேரள உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது காரணமாக நக்சலைட்டுகள் தங்கள் இருப்பிடத்தை கேரளாவுக்கு மாற்ற வாய்ப்புள்ளது. குறிப்பாக வருசநாடு மலைப்பகுதியில் இருந்து 5 மணி நேரம் நடந்து வந்தால் கேரளாவின் முக்கிய அணையான முல்லைப் பெரியாறு அணையை அடைந்துவிடலாம்.
முல்லை பெரியாறு அணை தாக்கப்பட்டால் மிகப்பெரிய உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும். இதை நக்சலைட்டுகள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்தலாம். எனவே அணையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரள கல்குவாரிகளுக்கு வெளி மாநிலத்தில் இருந்து வெடி மருந்துகள் என்ற போர்வையில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இப்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கல்குவாரிகளுக்கு கொண்டு வரப்படும் வெடி மருந்துகளை காவலர்கள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
நக்சலைட்டுகளின் முக்கிய தலைவரான மல்லராஜரெட்டி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 20 நக்சலைட்டுகள் தமிழக எல்லையில் ஊடுருவி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கேரள- தமிழக எல்லைப் பகுதிகளான வயநாடு, காசர்கோடு, இடுக்கி பகுதிகளில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், நக்சலைட்டுகள் அனுப்பிய கடிதத்தில் கேரளாவில் முக்கியமான 20 இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.