தமிழகத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து அது தொடர்பான அறிக்கையை விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக இதுவரை கிடைக்கப் பெற்ற தகவலின்படி 49 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 90 ஆகும். மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து இதுவரை பெறப்பட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 4,408 குடிசைகள் மழையால் சேதமடைந்துள்ளன. இவற்றில் 1,137 குடிசைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. மழையால் பாதிப்படைந்துள்ள மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 22,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மாநிலம் முழுவதும் 85,253 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. முதலமைச்சர் கருணாநிதி உத்தரவுக்கிணங்க, மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் நேரிடையாகச் சென்று உரிய நிவாரணத்தை வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்ய முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். இம்மழையின் காரணமாக உயிரிழந்துள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சரின் உத்தரவுப்படி தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தில், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 22,500 நபர்களுக்கு 53,600 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் மண்எண்ணெய், ஒரு வேட்டி, புடவை ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களும், மழையால் ஏற்பட்ட சேதத்தினை மதிப்பீடு செய்து அறிக்கையினை அரசுக்கு விரைவாக அனுப்பி வைக்க பணிக்கப்படுகிறார்கள் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.