பெரியாறு அணை : நிபுணர் குழு நீர் கசிவை ஆராயும் - கருணாநிதி!

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (20:39 IST)
முல்லைப் பெரியாறு அணையில் ஏற்படும் கசிவின் அளவு குறித்து நிபுணர்களைக் கொண்டு ஆராயலாம் என்று தான் அளித்த யோசனையை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் ஏற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்!

டெல்லியில் நடந்த தேச மேம்பாட்டுப் பேரவை, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கின் வற்புறுத்தலின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை எந்த முடிவுமின்றி முடிந்துவிட்டதாகக் கூறினார்.

பெரியாறு அணையில் ஏற்படும் கசிவின் அளவு குறித்து ஆராய மத்திய நீர்வள ஆணையத்தின் மேற்பார்வையில் இரு மாநிலங்களின் பொறியாளர்களும் ஆய்வு செய்வார்கள் என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் அதிகமாக கசிவு ஏற்படுவதால் அணை உடைந்துவிடும் ஆபத்து உள்ளது என்று கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியபோது அணையின் கசிவை நிபுணர்களைக் கொண்டு ஆராயலாம் என்று தான் அளித்த பரிந்துரையை மத்திய நீர்வள அமைச்சர் சைஃபுதீன் சோஸ் எடுத்துக் கூற அதனை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் ஏற்றுக்கொண்டதாக முதலமைச்சர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தான் தயங்கியதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்தியதால் தான் பேசியதாகவும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்