மத்திய தொகுப்பிலிருந்து 300 மெகாவாட் மின்சாரம் : தமிழக முதல்வர்!

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (20:38 IST)
தமிழ்நாட்டில் நிலவிவரும் மின் உற்பத்தி பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய தொகுப்பிலிருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டிற்குத் தர மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்!

டெல்லியில் நடைபெற்ற தேச மேம்பாட்டுப் பேரவை, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டுவிட்டு இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாட்டின் தேவை 500 மெகாவாட் மின்சாரமாக உள்ள நிலையில், உடனடியாக 300 மெகாவாட் மின்சாரத்தை மத்தியத் தொகுப்பிலிருந்து தருவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் இந்திய ஆளுமை கல்விக் கழகத்தை அமைத்திட வேண்டும் என்கின்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை 85,000 கோடிக்கு உயர்த்தவும் சம்மதித்துள்ளதாகவும் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை கண்காணிப்பு இருந்தும், தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்