தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை தவிர்க்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று மின்வாரிய அதிகாரி கூறினார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார சேமிப்பு விழிப்புணர்வு விழா கலந்து கொண்ட மின்வாரிய உறுப்பினர் (உற்பத்தி) கே.கோவிந்தராஜு பேசுகையில், நெய்வேலியில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுமையாக கிடைக்கவில்லை. எனவேதான் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 500 மெகாவாட் கேட்டிருக்கிறார்கள். இது கிடைக்கும் என்று நம்புகிறோம். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்தியாவில் முதலிடத்திலும், உலக அளவில் 4-வது இடத்திலும் உள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தவும், சூரிய சக்தி மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு தற்காலிகமானது தான். மற்ற மாநிலங்களில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இதன்படி இப்போது நாம் வாங்கும் மின்சாரத்தை பின்னர் நாம் திருப்பித்தர வேண்டும் என்று கோவிந்தராஜு கூறினார்.