புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத் தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக வந்த புகாரின் அடிப்படையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியது. இதற்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் பதில் கடிதம் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 97 விழுக்காடு முடிவடைந்துள்ளது. மீதியுள்ள பணிகளை முடித்து ஜனவரி 11ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் நகல் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்படும். அதன் மீது அந்த கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் சில மாநிலங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த தொய்வை நீக்கி பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர் அடையாள அட்டை, உள்நாட்டு பாதுகாப்பு கருதி தேசிய அட்டையாக பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும். புதிய தொகுதி சீரமைப்பு அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுமா? என்பது பற்றி நான் பதில் கூற முடியாது. காரணம், அந்த குழுவில் நான் உறுப்பினராக இல்லை. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மத்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார்.