தமிழக ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா: பக்ரீத் தியாகத் திருநாள் நம்மிடையே ஒற்றுமையையும், சகோதர உணர்வை யும், அமைதி. நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும் என்று கூறியிருப்பதோடு, பக்ரீத் பெரு நாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா : இறைவனை வழிபட்டு, ஏழை, எளியோர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற உன்னதப் பணியை நினைவூட்டும் திருநாள் பக்ரீத். இந்த நன்னாளில் இறைவனின் கட்டளைகளான சமயப்பற்று, கடவுள் பற்று, அனைவரிடத்திலும் அன்பு காட்டுதல், ஈகை, தியாகம், அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை கடை பிடித்து பக்ரீத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெரு மக்களுக்கு தனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி : அண்ணல் நபிகள் நாயகத்தின் அறிவுரைக்கு ஏற்ப மனித இனத்தில் உள்ள ஜாதி, இன, மத வேறுபாடுகளை கடந்து நல்லிணக்கத்தோடு, நாடு உயர உழைப்போம் என்று சூளுரை ஏற்போம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : சமுதாயத்திலிருந்து ஒருவர் பெறுவதை விட, தருவது தான் அதிமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர் உண்மையாக சமுதாயத்திற்கு பயன்படுபவர் ஆவார். அதைத்தான் தியாகமென்று மக்கள் போற்றுகின்றனர். இறைவன் மீது கொண்டுள்ள பக்தியால் தங்களது ஒரே மகனை இழக்கத் தயாரான நாளே பக்ரீத் திருநாள். எதையும் இழக்க துணிந்த தியாகத்திருநாளாகும்.
இந்த நன்னாளில் எவரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற அடிப்படையில், பகிர்ந்து உண்டு வாழ்கின்ற சிறந்த கொள்கையும் கடைபிடிக்கப் படுகின்றது. தங்களுக்கு கிடைத்த உணவினை ஏழைகளுக்கும் பகிர்ந்து உண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாம் இந்த நன்னாளாகும். பகிர்ந்து உண்டு வாழ்தல், பிறருக்கு பயன்படுதல் போன்ற உயரிய லட்சியங்களைப் போற்றுவது தான் தமிழ் மரபு. ஆகவே இந்த நன்னாளில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பண்பாட்டின் அடிப்படையில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ : ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களாகவும், சமயம் வரும்போது லட்சியத்திற்காக உயிரை விட துணியவும் தயாராக இருத்தல் வேண்டும் என் பதை ஞாபகப்படுத்தும் இத்தியாகத் திருநாளில் இஸ்லாமியப் பெரு மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு தலைவர் எச். வசந்தகுமார், தென் சென்னை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு மற்றும் காயிதே மில்லத் பிறந்த நாள் விழாக் குழு தலைவர் கவிஞர் வீரைகறீம், அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் எம்.மத்தியாஸ் உள்பட பலர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.