அண்ணல் நபிகள் பெருமான் வகுத்துத் தந்த அருமையான மனித நேயப்பண்புகளைப் பின்பற்றிடும் சிறுபான்மை சமுதாய இஸ்லாமிய மக்களுக்கு எனது பக்ரீத் நல்வாழ்த்துகள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று விடுத்துள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் நாடெங்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தனது வீட்டின் சமையல் அறையில் இருந்து வெளி யேறும் வாசனையால் வசதியற்ற தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்ற சிந்தனையைக் கொண்ட மனித நேயமிக்கது இஸ்லாமியக் கலாச்சாரம்.
இந்தக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்த நபிகள் நாயகம் அவர்கள் உண்மையான முஸ்லிம். தனது சகோதரர்களையும், நண்பர்களையும் நேசிப்பார். அவர்களுக்கு நன்மையை மட்டுமே நாடுவார். அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களது கவுரவத்தையும் செல்வங்களையும் பாதுகாப்பார். அவர்களது குறைகளை மறந்து மன்னித்து விடுவார். தனது நாக்கு, கரங்கள் பிற உறுப்புகள் என அனைத்திலும் பரிசுத்தமானவராக, வாரி வழங்கும் வள்ளலாக பொய் பேசாத உண்மையாளராக கடுமை காட்டாத மென்மையானவராக தூய மனதுடையவராகத் திகழ்வார் என்று குறிப்பிடுகிறார்கள்.
அண்ணல் நபிகள் பெருமான் வகுத்துத் தந்த இத்தகைய அருமையான மனித நேயப்பண்புகளைப் பின்பற்றிடும் சிறுபான்மை சமுதாய இஸ்லாமிய மக்கள் தமிழகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளுடன் இவ்வாண்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரவணைத்திடும் தமிழக அரசின் சார்பில் என் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.