ஒவ்வொரு அணி‌யி‌ன் சார்பில் மாநாடு நட‌த்த‌ப்படு‌ம்: கருணாநிதி அறிவிப்பு!

Webdunia

புதன், 19 டிசம்பர் 2007 (11:03 IST)
''தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஒவ்வொரு அணியின் சார்பில் மாநாடு நடத்தப்படும்'' என்று முதலைமை‌ச்ச‌ர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், என் பொது வாழ்க்கையில் அரசியல் ரீதியாகவும் - சமுதாய ரீதியாகவும் - மொழி காத்திடும் களப்பணி அடிப்படையிலும் எத்தனையோ எழுச்சிமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மகத்தான வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அவ்வப்போது அறிக்கைகள் விடுத்திருக்கிறேன். உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். "இளைஞர்களுக்கு வழி விடுவோம்'' என்றும் "திரும்பிப்பார்'' என்றும் இருபத்தி ஐந்து கடிதங்கள் முரசொலியில் எழுதியவை அனைத்தும் இளைஞர்களின் சாதனை - அவர்கள் நாட்டுக்காக - மொழிக்காக - செய்துள்ள சாதனை - தியாகம் - ஆகியவை பற்றித்தான், அந்தக் கடிதங்கள் - இரு புத்தகங்களாக, வெளிவந்துள்ளன என்பது மட்டுமன்றி, நெல்லை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதினேன்.

கழுத்து வலிக்கும் - கண் எரிச்சல் எடுக்கும் - கவலையுடன் என்னை அருகிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் என் வீட்டாரின் அன்புத்தொல்லையும் பாசங் கலந்த கண்டிப்பும்; இப்போது நினைத்தாலும்; அனைத்தையும் மீறி, அல்லும் பகலும் பட்ட பாடு வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக நெல்லை மாநாடு அமைந்ததே என்பதை எண்ணும்போது - அரசுத்துறை காவலர்கள் இருவரும் - கழகக் காவலர்கள் மூவரும் போக்குவரத்துச் சாலை விபத்தில் சிக்கி போய் விட்டனரே நமை விடுத்து என்ற செய்தியைத் தவிர - என் செவி புகுந்து, சிந்தை கலக்கிய நிகழ்வு இது ஒன்றைத் தவிர மற்ற நிகழ்வுகள் எல்லாம் "நெஞ்சினிக்கும் நெல்லை'' என்றே நமது இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன!

இது இளைஞர் அணி மாநாடு என்பதாலோ என்னவோ, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கான பணிகள் எல்லாமே மிகவும் விறுவிறுப்புடனும் விரிவாகவும் நடத்தப்பட்டு -நெல்லையில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க இளைஞர் அணியின் செயலாளரும், மாநாட்டின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரண்டு, மூன்று முறை நெல்லைக்குச் சென்றதோடு, நான் ஏற்கனவே எழுதியதைப்போல ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட மாநாடுகளைப் போல செயல்வீரர்களைக் கூட்டி மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததன் பயனை நெல்லையிலே காண முடிந்தது.

பகலிரவு பாராது பட்ட கவலையும் - அனுபவித்த கஷ்டமும் - வீண் போகாமல்-பத்து லட்சம் பேரை இளைஞர் அணியினர் நெல்லையில் கூட்டிக் காட்டியது மட்டுமல்ல; அணு அளவு அசம்பாவிதத்துக்கும் இடமின்றி; அறிஞர் அண்ணா அடிக்கடி சொல்வாரே, அந்த ராணுவக் கட்டுப்பாட்டுடன் -ஒரு பிரமாண்டமான சைன்யத்தின் வரம்பு மீறாத அணி வகுப்பை நடத்திக் காட்டிய அருந்திறனைப் பாராட்டி; இன்னும் பத்துக் கடிதங்களாவது எழுத வேண்டும். எழுதிட உடலில் தெம்பு இருக்கிறதோ, இல்லையோ; உள்ளத்தில் அதற்கான ஊக்கம் இருக்கத்தான் செய்கிறது! என் செய்வது, அத்துடன் ஆட்சிக் கடமை ஆற்றிட டெல்லி செல்ல வேண்டியுள்ளதே; இரண்டு மூன்று நாட்களாய் நெல்லையிலேயே பல் வலியுங்கூட - பல் மருத்துவர் வெற்றி வேந்தனிடம் சென்னையில் அவசர சிகிச்சை மட்டும் செய்து கொண்டு டெல்லி விரைகிறேன்.

இளைஞர் அணியின் அரும்பணி கண்டோம் -இது இயக்கத்தின் பேரணியாக இன்று வளர்ந்துள்ளது கண்டு பெருமிதம் கொண்டோம் - இந்த வளர்ச்சிக்கு நமக்கு ஊக்கமளித்து உந்து சக்தியாக இருந்து உதவிடும் பெரியார், அண்ணா எனும் இரு பெருந்தலைவர்களின் வாழ்த்தும், வழி காட்டுதலுமே காரணம் என்பதை உணர்ந்து அவர்களுக்கு நிறைந்த நெஞ்சுடன் நன்றியினைக் கூறி; பயணத்தைத் தொடர்வோம். இளைஞர் அணியினர்க்கு வற்றாத ஊக்கமும் -வளமான சிந்தனையும் உருவாகிட நான் வாழ்த்திடும் நேரத்தில் -இதேபோல் இந்த இயக்கத்தின் அணிகளான மகளிர் அணி அடுத்த கட்டமாகவும்; அடுத்தடுத்து ஒவ்வொரு அணியின் சார்பிலும் கருத்தாய்வு நிகழ்வுகள் -மாநாடுகள்-நடைபெறுவதற்காக ஏற்பாடுகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன என்பதையும் மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன்.

நெல்லை மாநாட்டில் இளைஞர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுடன் அவர்கள் உடனடி செயல்பாடு என்ற வகையில் சேது சமுத்திரத் திட்டத்தின் தேவை குறித்து -அண்ணா தமிழகத்தில் ஒரு நாள் எழுச்சி நாள் கொண்டாட ஆணையிட்டார், கொண்டாடினார். இனி வரும் நாட்கள் எல்லாம் அதற்கான எழுச்சி நாட்களாக அமைந்திட.... கழகத் தலைமையின் வேண்டுகோளை நிறைவேற்றும் பணியில் அனைவரும் ஈடுபட்டு வெற்றி காண வேண்டுமென்பதே; நெல்லை இளைஞர் அணி மாநாட்டின் சார்பாக அளித்திடும் அவசர - அவசிய- வேண்டுகோளாகும் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்