தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மேலும் 2 நாள் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை கொட்டுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. பகல் நேரத்தில் இடையிடையே மழைத்தூறல் விழுவதும் நிற்பதுமாக இருந்தது. தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் இதே நிலை காணப்பட்டது.
சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று (19ஆம் தேதி) மிக பலத்த மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிருமுறை மழையோ அல்லது கனத்த மழையோ பெய்யும். தரைக்காற்று பலமாக வீசும்.
தமிழகம், புதுச்சேரி இடையே வடகிழக்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம் முழுவதும் இன்று (19ஆம் தேதி) ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் ஆகிய அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெகநாதன் நேற்று இரவு தெரிவித்தார். தற்போது, பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு நடந்துகொண்டு இருப்பதால் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வை வேறு தேதியில் பள்ளி நிர்வாகத்தினர் வசதிக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் நேற்று அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவானது. மேலும் மயிலாடுதுறையில் 11 செ.மீ., சிதம்பரம் அண்ணாமலை நகரில் 10 செ.மீ. மழை பதிவானது. கடலூர், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் - 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், அதிராம்பட்டினம், கும்பகோணம், ஒரத்தநாடு, குடவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம் - 4 செ.மீ., சென்னை, தாம்பரம், மதுராந்தகம், சோழவரம், நெற்குன்றம், பாபநாசம், நாகப்பட்டினம், வேதாரண்யம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, ஜெயங்கொண்டம் - 3 செ.மீ., செங்கல்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, கொரட்டூர், ஸ்ரீமுஷ்ணம், ஆலங்குடி, தொண்டி, அரவக்குறிச்சி, திருச்சி - 2 செ.மீ.