இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட் பட்ட மிக முக்கிய சாலையான கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதே போன்று, வாங்கபாளையம், அருகம்பாளையம் வழியாக செல்லும் அரசு காலனி கரூர் புதிய பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை, பஞ்சமாதேவி வழியாக செல்லம் கரூர்-நெரூர் மாநில நெடுஞ்சாலை, கரூர் ஊராட்சி ஒன்றியம் வாங்கல்-நெரூர் சாலை ஆகியவை இரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளன.
கரூர்-நெரூர் மாநில நெடுஞ்சாலையின் அவல நிலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலையில் நாற்று நாட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கின் காரணமாக பொதுமக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பயண நேரம், வாகன இயக்கச் செலவு ஆகியவையும் அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள சாலைகளை புதுப்பிக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (18ஆம் தேதி) காலை 10 மணி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.