ஸ்டாலின் பற்றிய தொண்டர்களின் எதிர்பார்ப்பு ‌விரை‌வி‌ல் நடக்கும்: கருணாநிதி!

Webdunia

திங்கள், 17 டிசம்பர் 2007 (13:49 IST)
மு.க.ஸ்டாலின் பற்றிய தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நடக்கும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கூ‌றினா‌ர்.

நெல்லையில் நேற்று நடந்த தி.மு.க. இளைஞர் அணி 2-ம் நாள் மாநாட்டில் தி.மு.கழக தலைவர் முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், காவியக்கலைஞர் காட்சிக்கு தலைமை தாங்கி வைரமுத்து பேசும் போது, கடிகாரத்தின் சின்னமுள்ளும், பெரிய முள்ளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். நான் எந்த கடிகாரம் என்று கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார். என்னைப் பொறுத்தவரை எந்த முள் என்பதில் கவலை இல்லை. ஆனால் அந்த கடிகாரம் நன்கு இயங்க வேண்டும், நான் நேரம் பார்க்கும்போது நேரம் சரியாக இருக்க வேண்டும். ஆற்காடு வீராசாமியா, அன்பழகனா, துரைமுருகனா என்று பார்ப்பதில்லை. கழகம் நன்றாக இருக்கிறதா, பணி நடக்கிறதா என்று தான் பார்க்கிறேன்.

ஸ்டாலின் நான் உனக்கு தந்தை என்றாலும், நான் குடும்ப உறவோடு, குடும்ப பாசத்தோடு நடந்ததில்லை என்று உனக்கு நன்றாக தெரியும். இதை அன்பழகன், துரைமுருகன், ஆ.ராசா போன்ற அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். நான் எனது தந்தை இறந்துபோகும் தருவாயிலும், என் முதல் மனைவி பத்மா இறக்கும் தருவாயிலும் கூட்டத்திற்கு சென்றவன். தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் கூட போதாது, நடந்து காட்ட வேண்டும். நடப்பார் என்று உணர்ந்து கொண்டதால் தான் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் இளைஞர் அணி செயலாளராக. எங்கள் நம்பிக்கை மேலும் உறுதிப்படும் அளவுக்கு நடந்து கொண்டால் எனக்கு, கழகத்துக்கு பெருமை. அந்த பெருமையை அவர் எனக்கு ஈட்டித் தருவார் என்று நம்புகிறேன்.

ஒரு தொண்டன் தன்னை தி.மு.க. இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டால் ஏச்சுபேச்சுக்களை எல்லாம் கேட்டாக வேண்டும். அவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு தான் பணியாற்ற வேண்டும். பாடுபட்டாக வேண்டும். சாதாரண ஒரு சின்ன விஷயத்திற்கு கூட எவ்வளவு எதிர்ப்புகளை உருவாக்குவார்கள் என்பது எனக்கு தெரியும். ராமர் யார்? அவர் தான் பாலத்தை கட்டினாரா? அப்படி ஒரு பொறியாளர் இருந்ததாக தெரியவில்லை என்று கூறியதற்கு, ராமரை நிந்தித்து விட்டேன் என்று எத்தனை நீதிமன்றங்களில் என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.

நான் அலகாபாத் சென்றிருந்த போது, நான் ராமனுக்கு விரோதி என்று இந்தியில் சுவரொட்டி அச்சிட்டு நகரம் முழுவதும் ஓட்டியிருந்தார்கள். அங்கு நான் பேசிய போது, ராமாயணத்தை கூட சரியாக படிக்காமல் இருக்கிறீர்களே, ராமனுக்கு எதிரி ராவணன் தானே தவிர நான் அல்ல என்றேன். இப்படித்தான் எனது அணுகுமுறை. அண்ணாவின் அணுகுமுறை. தமிழ்நாடு வளம்பெற வேண்டுமா, வேண்டாமா? வாணிப வளர்ச்சி பெறவேண்டாமா? 50 ஆண்டுகாலமாக தமிழன் கண்ட கனவு நிறைவேற வேண்டாமா? சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற பாடுபடுவோம் என்று அனைத்து தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் கூறியிருக்கிறோம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது. அறிவித்ததை நாம் நிறைவேற்ற வேண்டுமா, வேண்டாமா? இதனை நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கும், மத்திய காங்கிரஸ் அரசுக்கும் மக்களிடையே பேரும் புகழும் கிடைத்துவிடும் என்று தான் பார‌திய ஜனதா கட்சி, அதில் உள்ள ராம பக்தர்கள் சேது திட்டத்திற்கு எதிராக ராமர் கட்டிய பாலம் அங்கு இருக்கிறது. அதை இடித்துவிட்டு சேது சமுத்திர கால்வாய் கட்டுவதை ஏற்க மாட்டோம் என்று எதிர்க்கிறார்கள்.

இளைஞர் அணியினர் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் மட்டும் போதாது. ராம பக்தர்களை சந்தித்து நாங்கள் ராமருக்கு எதிரிகள் அல்ல. அறிஞர்கள், விஞ்ஞானிகள் கூறிய சேது சமுத்திர திட்டம் பற்றிய கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்று பொதுமக்களுக்கு, ராமபக்தர்களுக்கு நீங்கள் விளக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் வந்தால் யார் பயன்பெறுவார்கள், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் அவர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இதனை நீங்கள் ஒரு கிராம பிரசார இயக்கமாகவே நாளை முதல் நடத்த தொடங்கலாம். இதன் மூலம் மக்கள் தெளிவடைவார்கள்.

சட்டப்படி நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கலாம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக நடைபெறுகின்ற காரியத்தை எந்த நீதிமன்றமும், அது நேர்வழியில் நடைபெறுகின்ற மன்றமாக இருந்தால் அதை தடுக்காது. அப்படி தடுத்தால் எத்தனை கோடி மக்களுடைய நல்வாழ்வை தடுக்கிறோம் என்பதை புரியாமல் தடுக்கிறார்கள் என்று பொருள். பிரசார பயணம் உங்களால் வெற்றிகரமாக செய்யமுடியும். உங்களை நம்புகிறேன். அந்த வெற்றியை கொண்டுவந்து சேர்ப்பீர்கள் என்றும் நம்புகிறேன். இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. இங்கு கூடியுள்ள பத்திரிகையாளர்களும், நீங்களும் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்