திருநெல்வேலியில் இன்று காலை தி.மு.க. இளைஞரணியின் முதலாவது மாநில மாநாடு கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளதால் திருநெல்வேலியே மாவட்டமே கலைகட்டியுள்ளது.
அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணியின் அணிவகுப்பை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையிலிருந்து பார்வையிட்டார்.
தி.மு.க.வில் இளைஞரணி உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 30 ஆண்டுகளில் மாவட்ட மாநாடுகள், மண்டல மாநாடுகள் என பல நடத்தப்பட்டுள்ளன. ஆனால் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது முதல் முறையாக தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு திருநெல்வேலியில் இன்று துவங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட பந்தல் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி இந்த பந்தலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 37 நாட்களாக 300 கலைஞர்கள் இரவு, பகலாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றன. நேற்றிரவு வரை அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. 1,000 அடி நீளம், 500 அடி அகலம் கொண்டதாக இந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் முகப்புத் தோற்றம் வெள்ளை நிறத்திலான கோட்டை வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதில் வேல் ஏந்திய வீரர்கள் சிலையும், தி.மு.க. கொடி பிடித்து தொண்டர்கள் செல்வது போன்ற சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேடை வரை முதலமைச்சரின் கார் வருவதற்கு வசதியாக 100 அடி தூரத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து திடலுக்கு வரும் ஒரு கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தது. மேடையை சுற்றிலும், மேடைக்கு முன்பாக உள்ள பந்தல் உயர்ரக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேடையின் இடதுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஊடக மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் தொலைபேசி, கணிப்பொறி, லேப்டாப், இணையதள வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அமைச்சர் பரிதி இளம்வழுதி கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை www.dmkyouthwing.in என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டு பந்தலின் இருபுறங்களிலும் மருத்துவ வசதிக்கென தனிக்குழு உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவையும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, சிற்றுண்டி கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தது.
அனந்தபுரி விரைவு ரயில் மூலம் இன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி திருநெல்வேலிக்கு வந்தார். அப்போது முதலமைச்சர் கருணாநிதிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மாநாட்டு திடலில் 84 அடி உயர கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை தி.மு.க. மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி திறந்து வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று மாநாட்டு பந்தலை சுற்றி பார்த்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு இளைஞரணியின் பிரம்மாண்ட அணிவகுப்பு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலிருந்து துவங்குகிறது. இந்த அணிவகுப்பிற்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர் ஆர்.ராசா அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வாரியாக இளைஞரணியினர் வெள்ளைச் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
நெல்லை பிஷப் பங்களா, ஆட்சித் தலைவர் பங்களா வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடந்து இந்த அணிவகுப்பு மாநாட்டு திடலை வந்தடைகிறது. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் அமர்ந்தபடி முதலமைச்சர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும், முக்கிய நிர்வாகிகளும் அணிவகுப்பை பார்வையிடுகின்றனர். முதலமைச்சர் கருணாநிதியின் 7 வயது முதல் 84 வயது வரையிலான முக்கிய சம்பவங்கள் இதில் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். இத்துடன் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.
இந்த மாநாட்டையொட்டி திருநெல்வேலி நகரத்தைச் சுற்றியும் நான்கு சாலைகளிலும் 20 கி.மீ. தூரத்திற்கு கட்அவுட், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.