''2009ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பா.ம.க. கூட்டணி நீடிக்கும். அந்த கூட்டணியில் தி.மு.க. இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதைப்பற்றி கவலையில்லை. அந்த கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டால் அக்கட்சி வேட்பாளருக்கு நாங்கள் ஓட்டு போடுவோம். தி.மு.க.வினர், சட்டமன்ற தேர்தலில் நடந்து கொண்டது போல நாங்கள் நடந்து கொள்ளமாட்டோம்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 31 இடத்தில் போட்டியிட்டோம். 18 இடத்தில் வெற்றி பெற்றோம். 13 இடத்தில் தி.மு.க. எங்களை தோற்கடித்தது. இதனை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியிடமே கூறியிருக்கிறேன். இதுபோன்ற துரோகத்தை நாங்கள் செய்யமாட்டோம். தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணி எங்கள் தலைமையில் அமையும்.
பல விஷயங்களில் தி.மு.க. எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி பா.ம.க. சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தோம். கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமிக்கு கடிதம் எழுதினோம். ஆனால், தி.மு.க.வினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதுபோல `எய்ம்ஸ்' விவகாரத்திலும் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
தமிழகத்தில் பிரச்சினைகள் தொடர்பாக நான் அறிக்கை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யாரும் என்னிடம் பேசுவதில்லை. நெல்லையில் நடக்கும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டிற்கு என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் போகமாட்டேன் என்று ராமதாஸ் கூறினார்.