மாநில அளவில் சிறந்த கூட்டுறவு யூனியனாக ஈரோடு யூனியன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் மாநில அளவிலான கூட்டுறவு வார நிறைவுவிழா நடந்தது. இந்த விழாவில் மாநில அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனமாக ஈரோடு மாவட்ட கூட்டுறவு யூனியன் தேர்வு செய்யப்பட்டது.
அமைச்சர் கோ.சி.மணி கேடயம் வழங்கினார். ஈரோடு கூட்டுறவு யூனியன் தனி அலுவலர் ஜெயராம் மற்றும் பிரச்சார அலுவலர் ஆனந்தராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தனி அலுவலர் ஜெயராம் கூறியதாவது, ஈரோடு மாவட்ட கூட்டுறவு யூனியன் 1982ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. யூனியனில் ஆயிரத்து 736 கூட்டுறவு நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 2006-07ம் ஆண்டில் உறுப்பினர் சங்கங்களிடமிருந்து கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி குறியீடு ரூ. 1.02 கோடியை விஞ்சி ரூ. 1.26 கோடி வசூல் செய்யப்பட்டது.
ஆண்டு சந்தா இலக்கான ரூ.5 லட்சத்தை விஞ்சி ரூ.7 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 91 கூட்டுறவு சங்கங்களில் ஒன்பது ஆயிரத்து 993 பேர் பயன்பெறும் வகையில் உறுப்பினர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இளைஞர்களிடையே கூட்டுறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஐந்து இடங்களில் கண்காட்சி அரங்குகள் அமைத்தும், ஐந்து கருத்தரங்கம் நடத்தியும், பிரச்சார பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை பாராட்டி மாநில அளவிலான சிறந்த ஒன்றியமாக ஈரோடு ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.