அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் ஜோதி மனு தள்ளுபடி!
Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (14:22 IST)
அரசு பணத்தை முறைகேடாகச் செலவிட்ட வழக்கில் வழங்கப்பட்ட முன் விடுதலை பிணைய ஆணையில் மாற்றம் செய்யக் கோரி அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜோதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பிணைய முன் விடுதலைப் பெறுவதற்கு நீதிமன்ற வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் ஜோதியின் கோரிக்கை மனு, இன்று காலை நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அது விசாரணைக்குத் தகுதியானது அல்ல என்று நீதிபதி கூறினார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வாதிட்ட வழக்கறிஞர் ஜோதி, இரண்டு முறை நீதிபதியைப் பெயர் சொல்லி அழைத்ததையடுத்து தனது இருக்கையை விட்டு எழுந்த நீதிபதி சுதந்திரம் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக கூறிவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த விசாரணையின் போது, முன்பிணைய ஆணையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது.
காவிரி நதிநீர் ஆணையக் கூட்ட விவகாரம் தொடர்பாக விமானத்தில் புதுடெல்லிக்குச் சென்ற ஜோதி, ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணத்தை முறைகேடாகச் செலவிட்டார் என்று எழுந்த புகாரை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறை, ஜோதியைக் கைது செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து வழக்கறிஞர் ஜோதி முன்பிணைய விடுதலை கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ரூ.10,27,504 தொகையை நீதிமன்ற வைப்புத் தொகையாகக் கட்டிவிட்டு முன்பிணை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதிலிருந்து விலக்கு கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஜோதி கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.