பா.ம.க. எதிர்ப்பதால் திட்டங்களை கைவிடக் கூடாது: சரத்குமார்!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (10:32 IST)
''பா.ம.க. எதிர்ப்புக்கு பயந்து வளர்ச்சித் திட்டங்களை கைவிடக் கூடாது'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் சர‌த்குமா‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மின் நிலையம் அமைக்க விவசாய நிலத்தை எடுக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறுகிறார். காட்டுமிராண்டிக் காலத்திற்கு தமிழ்நாட்டை மாற்ற நினைக்கிறார் ராமதாஸ் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் குற்றம்சாட்டுகிறார். இரண்டுமே தவறான கருத்துக்கள். பகுதி மக்களின் ஒப்புதலோடு நிலங்களுக்கு சரியான விலை கொடுத்து மின் நிலையம் ஆரம்பிப்பது தவறல்ல.

ஒரு இடத்தில் 600 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமையா விட்டால் தமிழ்நாடு கற்காலத்துக்குப் போய்விடாது. பல மின் நிலையங்களை வேறு பல இடங்களில் அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். கடலூரில் அமையவிருக்கும் மின் நிலைய பங்குதாரர் ஒருவர் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உறவினர் என்பதும், 200 ஏக்கர் போதுமான நிலையில் தேவைக்கு அதிகமாக 1200 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தப்போகிறது என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், மின்உற்பத்தி நிலையம் போன்றவற்றை அமைக்க பா.ம.க. எதிர்ப்பதாகவும், இதனால் தமிழ்நாடு காட்டுமிராண்டி காலத்திற்குச் செல்வதாகவும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருக்கிறார். பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பா.ம.க. எதிர்ப்புக்கு விட்டுக்கொடுத்து பல வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டுவிடுமோ என்ற பயம் கலந்த சந்தேகம் மக்களுக்கு இருந்து வருகிறது. மக்கள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை எப்படியும் நிறைவேற்றியே தீரவேண்டும் எ‌ன்று சர‌த்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்