‌நிலம‌ற்ற ‌விவசா‌யிகளு‌க்கு 29ஆ‌ம் தே‌தி இலவச ‌நில‌ம் கருணா‌நி‌தி துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (10:22 IST)
தமிழ்நாட்டில் 6-ம் கட்டமாக நிலமற்ற விவசாயிகளுக்கு 28 ஆயிரம் ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்ட‌த்தை ஈரோட்டில் கருணாநிதி டிச‌ம்ப‌ர் 29ஆ‌ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதற்கேற்ப, நிலமற்ற ஏழை விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் பெரியார் பிறந்த நாளாகிய 17.9.2006 அன்று தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திருவள்ளூரில் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக விழுப்புரத்திலு‌ம், மூன்றாம் கட்டமாக வந்தவாசியிலு‌ம், நான்காம் கட்டமாக திருநெல்வேலியிலு‌ம், ஐந்தாம் கட்டமாக புதுக்கோட்டையில் துவ‌ங்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் இ‌ந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது 6-வது கட்டமாக தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 230 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் பணிகளையும், வீடில்லாத ஏழைகளுக்கு 3 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல் எனும் இந்த ஆண்டின் இலக்கினை எய்தும் வகையில் மேலும், 50 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் பணிகளையும் ஈரோட்டில் 29ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, 30ஆ‌ம் தேதி மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டு நிலமற்ற ஏழை விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இலவசமாக நிலங்களையும், வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்குகிறார்கள்.

அமைச்சர்கள் பங்குபெறும் மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைச்சர் க.அன்பழகன், பொன்முடி ஆகியோரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டியில் அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காஞ்‌சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசனும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் கே.பி.பி.சாமியும், மற்றுமுள்ள மாவட்டங்களில் மற்ற அமைச்சர்களும் வழங்குகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்