பள்ளி, கல்லூரி அருகே போதை பொரு‌ள் விற்பதை தடுக்க தனிப்படை அமைப்பு!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (09:59 IST)
பள்ளி, கல்லூரிகளின் அருகே கஞ்சா சாக்லெட், கஞ்சா ஐஸ்கிரீம் போன்ற போதைப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று கண்காணிக்க தமிழகம் முழுவதும் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஐ.‌ஜி.கரன்சின்கா, டி.ஐ.ஜி.அருணாச்சலம் ஆகியோர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழக சிறைகளில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் இல்லை. நாங்களே சிறைக்கு சென்று சோதனை நடத்த முடியாது. சிறைத்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுப்பார்கள். எங்களுக்கு தகவல் கிடைத்தால், சிறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் அருகே கஞ்சா ஐஸ்கிரீம், கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. அப்படி எங்களுக்கு தகவல் இல்லை. எனினும், தமிழகம் முழுவதும் 15 தனிப்படைகள் அமைத்துள்ளோம். அவர்கள் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா சாக்லெட், கஞ்சா ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்