பொன்னையாற்றின் குறுக்கே ஆ‌ந்‌திர அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் : வைகோ!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (09:48 IST)
''பொன்னையாற்றின் குறுக்கே ஆ‌ந்‌திர அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்'' என்று வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் சிற்றூர் அருகே உள்ள கங்காநல்லூர் பகுதியில் பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த டிசம்பர் 6ஆ‌‌ம் தேதி ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டி தடுப்பு அணை கட்ட குப்பத்தில் அடிக்கல் நாட்டி உள்ளார்.

திருப்பதி அருகே ஷேசசைலம் என்ற மலைப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பொன்னை ஆறு தமிழ்நாட்டில் 39 கிலோ மீட்டர் தொலைவு கடந்து திருவலம் அருகே பாலாற்றில் கலக்கின்றது. வேலூர் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது மட்டுமில்லாமல் 129 ஏரிகள் நீர் ஆதாரம் பெறக்கூடிய இந்த ஆற்றில் தடுப்பு அணை கட்டினால் வேலூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்படும். 8,814 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதும், தமிழகத்தில் பாதிக்கப்படும்.

தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருவதற்கு முழுக்காரணமே கருணாநிதி தான். அவர் ஆட்சிக்காலத்தில் தான் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னை ஆறு என வரிசையாக தமிழகத்தின் நதிகளின் மீதுள்ள உரிமைகளை பறி கொடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு உள்ளது. பாலாறு மட்டுமில்லாமல், பொன்னை ஆற்றிலும் ஆந்திர அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில் தமிழக மக்கள் அதற்கு உரிய பாடத்தை கற்பிப்பார்கள் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்