சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சி கழகத்தின் சித்த மருத்துவ நூல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் அன்புமணி பேசுகையில், தேசிய கிராமபுற சுகாதார இயக்கத்தால் கிராம மக்களுக்கு முழு சுகாதார, மருத்துவ வசதி கிடைக்க வழி வகுக்கிறது. செவிலியர்களை புதிதாக நியமனம் செய்கிறோம். சுத்தம்- சுகாதார குழுக்களை, கிராமங்களில் நியமிக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் வசதி செய்கிறோம். இதனால் இந்த திட்டம் பிரபலம் ஆகிறது. வெளிநாட்டினரே இதை பின்பற்றுகிறார்கள்.
ஆனால் இந்த திட்டத்தை நமது நாட்டில் செயல்படுத்த பல்வேறு தடைகள் வருகின்றன. நான் பிடிவாதக்காரன் அல்ல. மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரிதானா? நீங்களே நியாயம் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படிப்பட்ட கட்சிகள் கிராம மக்களின் விரோதிகள். பாராளுமன்றத்தில் இவர்கள் பேசும்போது கிராமபுரத்தில் மருத்துவர்களே இல்லை என்கிறார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் வெளியே இப்படி பேசுகிறார்கள்.
ஒரு மருத்துவர் பயிற்சி முடித்ததும் முழு மருத்துவர் ஆகிவிடுகிறார். அவரைத்தான் ஒரு ஆண்டு கிராமத்தில் பணியாற்ற சொல்கிறோம். ரூ.8 ஆயிரம் ஊதியமும் கொடுக்கிறோம். 4 மாதம் ஆரம்ப சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மருத்துவமனை என்று பணியாற்றுவதில் என்ன சிரமம்.
இந்தியாவில் தமிழ்நாடுதான் சுகாதாரத்துறையில் முதல் இடத்தில் உள்ளது. அப்படியானால் மற்ற மாநிலங்கள் எவ்வளவு மோசமாக உள்ளது என்று எண்ணிப்பாருங்கள். இதற்காக இந்த திட்டத்தை கொண்டு வருவது பற்றி சொன்னேன். முதலமைச்சர் கேட்டுக் கொண்டபடி இது குறித்து கருத்து அறிய சாம்ப சிவராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு மாத காலத்தில் பரிந்துரை அளிக்க உள்ளனர். அதன் பிறகுதான் முடிவு எடுக்கப்படும். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்புமணி கேட்டுக் கொண்டார்.