''கல்வித்திட்டத்தில் அடிக்கடி மாற்றம் செய்யக்கூடாது. இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழப்பம்தான் மிஞ்சும்'' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காலச்சூழ்நிலைக்கேற்ப பாடத் திட்டங்கள் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய அரசு பாடத்திட்ட மாற்றத்தில் எந்த ஒரு நெறிமுறையையும் கையாண்டதாக தெரியவில்லை. ஒரு கல்வியாண்டில் இதுதான் பாடத்திட்டம் என்று ஒவ்வொரு வகுப்பிற்கும் முடிவு செய்யப்பட்டு புத்தகங்களும் அச்சடிக்கப்படுகின்றன. இவ்வாறு புத்தகங்கள் அச்சடித்து வகுப்பறைகளுக்கு வந்து சேர்ந்த பின்னர் அதில் சேர்த்தல், திருத்தல் செய்வது அரசின் நிலையற்ற தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சீரான பாடத்திட்டம் மாற்றம் என்பது மாறி, ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலை உருவாகி அதுவும் மாற்றப்பட்டு அரசும், ஆட்சியாளர் களும் நினைத்தபோதெல்லாம் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்வது தவறானதாகும். இந்த கல்வி ஆண்டில் மட்டும் புத்தகம் அச்சடிக்கப்பட்ட பின்னர் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பல்வேறு பாடங்களில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் சில பகுதிகள் நீக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால் அடுத்த நாளே அதை வாபஸ் பெற்றுக்கொண்டது.
தமிழ் ஆர்வலர்களின் வேண்டு கோளுக்கிணங்க நீக்கப்பட்ட பகுதிகளில் திரும்ப சேர்த்துக் கொண்டதாக அரசு அறிவிக்கிறது. ஆனால் பாடத்திட்டத்தில் தங்களது கொள்கையை பரப்பும் விஷயங்கள் இருந்ததால் தான் திரும்ப பெற்று கொண்டதற்கான காரணம் என்பதுதான் உண்மை.
நினைத்தபோதெல்லாம் பாடத்திட்ட பகுதிகள் மாற்றப்படுவதால் எதை படிக்க வேண்டும். வேண்டியதில்லை என மாணவர்களும், இப்பாடப் பகுதிகளை மாணவர்களுக்கு பயிற்று விப்பதா வேண்டாமா என ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர். அரசு விரும்பும்போதெல்லாம் அமைச்சரவையையும் அமைச்சர்களது இலாகாக்களையும் மாற்றிக் கொள்ளலாம். கல்வி திட்டத்தை மாற்றுவது நல்லதல்ல.மாணவர்களது வாழ்க்கைப் பிரச்சனையில் கைவைப்பது நல்லதல்ல என்று இல.கணேசன் கூறியுள்ளார்.