சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் 2-வது விரிவாக்கம் பணியில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பொறியாளர் மாறன் மற்றும் சில ஊழியர்கள் நேற்று மாலை ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை அறிந்த பொறியாளர் மாறன், பணியாளர் மோகன் என்பவரை அழைத்து துர்நாற்றம் அடிக்கும் இடத்தை பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று பார்த்த போது கழிவுநீர் சாக்கடை பகுதியில் இருந்து துர்நாற்றம் வருவதை பார்த்தார்.
இதை பொறியாளர் மாறனிடம் மோகன் தெரிவித்தார். உடனே மாறன், சாக்கடை அடைப்பை நீக்குங்கள் என்று அங்கிருந்த பணியாளர்களிடம் கூறினார். இதையடுத்து மோகன், சாக்கடை தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அந்த தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தாக்கிய மூச்சி திணறி மோகன் பலியானார். நீண்ட நேரமாகியும் மோகன் வெளியே வராததால் தொட்டியை பார்த்த பொறியாளர் மாறனை விஷவாயு தாக்கியது. அவரும் மூச்சுத் திணறி இறந்தார். அவரை காப்பாற்ற தொழிலாளிகள் திரிஷ், முத்து ஆகியோரும் ஓடி வந்தனர்.
கழிவு தொட்டிக்குள் விஷவாயு இருப்பது தெரியாமல் மாறனை மீட்க முயன்றனர். அவர்களும் விஷவாயு தாக்கிய பலியாயினர். இது குறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவாகி விட்டதால் பாதுகாப்பு கருதி இரவில் பிணங்கள் மீட்கப்பட வில்லை. இன்று காலை 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அப்போது புனேயைச் சேர்ந்த சந்தோஷ் அங்கு மயங்கி கிடந்தது தெரிந்தது. அவர் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியானவர்களில் மோகன், திரிஷ் இருவரும் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்தவர்கள். தொழிலாளி முத்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.