உடனடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தயாராகும் இந்த பாடத்திட்டம் அடுத்த ஆண்டுக்கு அமல்படுத்தப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் கூறுகையில், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம். அப்போதைய நிலைக்கு ஏற்ப புதிய கருத்துக்கள், புதிய தொழில் நுட்பங்கள் புதிய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பி.இ. பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 4 வருடங்கள் முடிவடைய உள்ள காரணத்தால் புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணிநடந்து வருகிறது.
இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப, வேலை கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகளின் தேவையை அறிந்து அதற்கேற்பவும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேர்முகத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது பற்றியும், எப்படி திறமையாக வேலைபார்ப்பது என்பது பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தரம்மிக்க பாடத்திட்டமாக இதை தயாரிக்கிறார்கள். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் உள்பட அனைத்து துறைகளிலும் துறைவாரியாக இந்த பாடத்திட்டம் எழுதப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஒவ்வொரு துறை வல்லுனர்கள், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியவர்களின் கருத்துக்களையும் கேட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.
இந்த பணி, கடந்த ஒருவருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஒரு துறையில் மட்டும் குறைந்தபட்சம் 60 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாடத்திட்டங்கள் தயாரிப்பு பணிமுடிந்து இந்த புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு(2008-2009) கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டு பி.இ. படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இது சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளிலும் சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 106 பொறியியல் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் கூறினார்.