சென்னையில் இன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராமர் காலமே இல்லை என்று கருணாநிதியும், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசின் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் சீதையை மீட்பதற்காக வானர சேனையால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமரின் பொற்பாதங்கள் பதிந்த ராமர் பாலத்தைக் காண ராமேஸ்வரத்திற்கு வாருங்கள் என்று சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேது திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு. இதனை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டப் பணிகளில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் நிறுவனமான டி.ஆர்.பி. செல்வம் அண்ட் கோவிற்கு மணல் அள்ளும் சப் காண்டிராக்ட் விடப்பட் டுள்ளது. இதில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவற்றையெல்லாம் உச்ச நீதி மன்றத்தில் எடுத்துரைத்து இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன். டி.ஆர்.பாலு மீது மத்தியஅரசு ஊழல் வழக்குத் தொடர்ந்து அவரது சொத்துக்களை கைப்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் சட்டம். ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக உள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததால் 1991ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் திமுக ஆட்சி தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நிச்சயம் வரும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.