ஏழைகளின் வீடுகளை நீதிமன்ற தீர்ப்பை காட்டி அகற்றுவதில் காட்டும் வேகம், நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் பிரச்சனையில் அவசரம் காட்டப்படாதது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் இன்று கூறுகையில், பா.ம.க.வின் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக எடுத்துக் கொள்வதாகவும், அது தவறுகளை களைய பயன்படும் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். வள்ளுவரின் குறளை நன்கு உணர்ந்தவர் முதல்வர். அதற்கு உரையும் எழுதி இருக்கிறார். அதனால் தான் ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொள்கிறார். முதல்வரின் இந்த அணுகுமுறையை பாராட்டுகிறேன். ஆள்கிறவர்களுக்கு இந்த அணுகுமுறை அவசியம்.
சென்னையை சுற்றிலும் 30 ஆண்டுக்கும் மேலாக குடியிருப்பவர்களின் வீடுகளை நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதில் அதிகாரிகள் காட்டும் வேகம், சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மீது காட்டப்படவில்லை.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் பாதுகாக்க மாநில அரசு சட்டம் கொண்டு வந்தை சென்னை உயர் நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதன் மீது மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கேட்டதற்கு உயர் நீதி மன்றம் மறுத்துள்ளது. இத்தனைக்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. வசதி படைத்தவர்கள் விஷயத்தில் தவணைக்கு மேல் தவணை, அவசரச் சட்டம், நடவடிக்கை ஆமை வேகத்தில் கூட செல்லவில்லை. நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை.
ஆனால் சாதாரண மக்கள் விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை காட்டி குடியிருப்புகளை காலி செய்ய வேகம் காட்டப்படுகிறது. யாருக்கு பரிவு செய்யப்பட வேண்டுமோ அவர்களுக்கு பரிவு காட்டப்படவில்லை என்று ராமதாஸ் கூறினார்.