நடராஜன் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் இரண்டு பேரை கட்சியில் இருந்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
நடராஜனுடன் அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பலமுறை கூறியிருந்தேன். அதையும் மீறி அவர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று, கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்ட திருச்சி 2 எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.பி. சகாதேவன், திருச்சி எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆர். ராமசாமி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.