''கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்பேசி பேசுவதற்கு தடை விதிப்பது குறித்து சென்னை பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருகிறது'' என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
வகுப்புகளில் மாணவ-மாணவிகள் செல்பேசிகளை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி கற்கும் நேரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மாணவ-மாணவிகள் செல்பேசி பயன்படுத்த தடை விதித்தது. சமீபத்தில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ- மாணவிகள் செல்பேசிகள் கொண்டு தமிழக அரசு தடை விதித்தது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உள்பட மொத்தம் 170 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
இவர்களின் கல்வி நலன் கருதி கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்பேசி பேச தடை விதிக்கப்படுமா? என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டதற்கு, பள்ளி மாணவர்களுக்கு செல்பேசி தடை அவசியம் தான். சென்னை பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழக அங்கீகாரம் கொண்ட கல்லூரிகளிலும் செல்போன்களில் மாணவ-மாணவிகள் பேசுவதற்கு தடை விதிப்பது பரிசீலனையில் உள்ளது. இது குறித்து விரைவில் நடைபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.