மருத்துவ மாணவர்கள் தங்களது போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளதால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் தமிழக அரசு விதித்த கெடு இன்று முடிவடைந்தையடுத்து கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டன. இன்று காலை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் விடுதியை விட்டு வெளியேறினர். நண்பகல் 12 மணியளவில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஸ்டான்லியில் குடல் இரைப்பை சிகிச்சை பிரிவு வளாகத்தில் கூடி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் மைதிலி பாஸ்கரன், விரைந்து சென்று, உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி கிடையாது என்று கூறினார். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கும், மருத்துவமனை முதல்வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் கண்ணப்பன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் மருத்துவமனைக்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளனர்.