ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை : வைகோ வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (15:58 IST)
''சி‌றில‌ங்கா‌வி‌ல் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள‌ா‌ர்.

இது கு‌றி‌த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30.11.2007 முதல் நேற்று வரை கொழும்புவில் இருந்த ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோரை சிங்கள அரசு அத்துமீறி கைது செய்துள்ளது. ஏற்கனவே கொழும்பு நகரில் வாழும் தமிழர்கள் வெளியேற வேண்டும் என்று ராஜபக்சே அரசு உத்தரவு போட்டதைச் சர்வதேச சமுதாயம் எதிர்க்கவே பின்வாங்கியது.

அதன்பின் ஈழச் சகோதர, சகோதரிகளை எவ்வித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு பீதியை உண்டாக்கும் வகையில் கொழும்புவில் வாழும் தமிழர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று மாலை வரை இந்தக் கைது தொடர்ந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அரசு ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கி அங்குள்ள தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை டெல்லிப் பரிவாரங்கள் பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனிகளாக உள்ளன. அப்பாவித் தமிழர்களை கைது செய்ததன் மூலம் இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. சிங்கள அரசின் இந்தக் கொடிய கைது கடும் கண்டனத்திற்கு உரியது மட்டுமல்லாமல் மத்திய அரசு தன்னுடைய ராஜ்ய உறவால் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன” எ‌ன்று ம.‌தி.மு.க. செயலாள‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்