மலேசியா பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு- பா.ஜ. தலைவர்

திங்கள், 3 டிசம்பர் 2007 (11:32 IST)
மலேசியாவில் நடக்கும் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, முதன் முதலில் கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள் இந்தியர்கள். மலேசியாவில் உள்ள மக்கள் தொகையில் எட்டு சதவீதம் பேர் இந்தியர். அதில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். மலேசியா அரசு ஆக்ரமிப்பு அகற்றுதல், புதிய சாலைகள் அமைத்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாக கூறி ஹிந்துக்களின் கோயில்களை இடித்து வருகின்றனர்.

மேலும் இறந்து போன ஹிந்துக்களின் உடல்களை இஸ்லாமியர் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கேட்டால், "எங்களது நாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு எங்கள் நாட்டின் சட்டதிட்டத்தின்படி வழிநடத்தி செல்கிறோம். உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என கூறுகின்றனர். மலேசியாவில் நடக்கும் தமிழர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பெற்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரதமராக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. "ராகுல்காந்தி ஆட்சி இந்தியாவின் பொற்காலம்' என வர்ணிக்கிறது. அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு ராகு காலமாகும். மும்பையில் தாதாக்களின் அட்டகாசம், வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வன்முறையை தடுக்க சட்டம் போடப்பட்டது. மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதை பின்பற்றி வருகிறது. இப்படி தனித்தனி சட்டங்கள் போடாமல் நாடு முழுவதும் வன்முறையை தடுக்க ஒரே சட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் அகிம்சை முறையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதை அடக்குவதன் மூலம் வன்முறை ூண்டப்படுகிறது. கிராமப்புறங்களில் தொண்டு செய்வதை கட்டாயப்படுத்தக்கூடாது. தொண்டு என்பது சட்டத்தின் மூலம் வராது.

அன்பு மூலம் வரவேண்டும். கிராம மக்களுக்கு தொண்டு செய்தால் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசு மூலம் கிராம மக்களுக்கு சேவை செய்ய மத்திய மருத்துவமனை ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் துவங்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்