''திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் கோரிக்கையை ஏற்றி சென்னையில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75-வது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில், வீரமணிக்கும், எனக்கும் ஏற்பட்ட பழக்கம் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. அன்று முதல் இன்று வரை நானும் அவரும் இணைந்தே இருக்கிறோம். இடையிலே சில காலம் கசப்பு ஏற்பட்டாலும் கூட, அந்த கசப்பு கரும்பின் அடிப்பாகம் இனிப்பாக இருந்தாலும், நுனிப்பாகம் சிறிது கசப்பாக இருக்கும், ஆனாலும் கரும்பு கரும்பு தான் என்பதைப் போல, எங்களுக்குள் இடையிலே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், கரும்பு கரும்பு தான்.
பெரியார், அண்ணாவால் உருவாக்கப்பட்ட நாங்கள் இருவரது கொள்கைகளையும் இரண்டற கலந்து இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் உழைத்திருக்கிறோம். அவரைவிட 9 ஆண்டுகள் நான் அதிகம் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உழைப்பேன். அந்த உழைப்பு எனக்காகவோ, தனிப்பட்ட யாருக்காகவும் அல்ல, தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அவர்களுக்காக.
அதைத் தான் சத்யராஜ் இங்கு கூறினார், யாரோ ஒருவர் கடல் கடந்த ஒருவர் உம்முடைய வேலையை பாரும் என்று கூறியதற்கு, சத்யராஜை விட வேறு யாரும் இவ்வளவு நாசுக்காக பதில் அளித்திருக்க முடியாது. இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது. நான் என்னுடைய வேலையைத் தான் பார்க்கிறேன்.
கி.வீரமணி பெரியாருக்கு சென்னையில் 95 அடி உயர சிலை வைக்க வேண்டும் என்றார். 9 அடி, 10 அடி சிலைகள் வைக்கும்போதே பகுத்தறிவு பிரச்சாரம் இவ்வளவு வேகமாக நடைபெறும் போது, 95 அடி அல்லது 100 அடி உயரத்தில் சிலை வைத்தால் இன்னும் வேகமாக பகுத்தறிவு பிரச்சாரம் நடைபெறும் என்பதில் எனக்கு ஐயமில்லை. கி.வீரமணி கூறியதை பெரியார் இட்ட கட்டளையாக கருதி இதனால் என்ன விளைவு வந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் அதை அமைத்து தருவேன்.
சாதி ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் வராது என்று கருதுகிறேன். ஏனென்றால் நாம் எந்த ஜாதியையும் குறிப்பிடப் போவதில்லை. எனவே தகராறு வராது. அந்த கருத்தை பொது கருத்தாக ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் ஜாதி ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. அரசு உதவும். அவர் கூறிய இரு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.