மலேசியாவில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி. இவர்தான் மலேசிய தமிழர்களுக்கு நஷ்ட ஈடாக 16 லட்சம் கோடி வழங்க வேண்டுமென இங்கிலாந்து அரசின் மீது வழக்கு தொடர்ந்திருப்பவர்.
இவர் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த புதன் கிழமை தமிழகம் வந்த வேதமூர்த்தி, தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், பேரணியில் மலேசிய காவல் துறை கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறை, அத்துமீறல்கள் குறித்தும் வேதமூர்த்தி எடுத்துரைத்தார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் வேதமூர்த்தி சந்தித்து பேசினார். மலேசிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ம.தி.மு.க. ஆதரிக்கிறது. அதே வேளையில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவலை கொண்டு இருப்பதாக வைகோ தெரிவித்தார்.