நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யாதது, நலிந்த தேயிலைத் தொழிலாளர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோசமான சாலைகளை மேம்படுத்தாதது, ஊராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறாதது, கெரடா மட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை சீர்படுத்தாதது,
சமூக வனப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவது, சாலை அமைக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தியும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.இ.அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்தும், நீலகிரி மாவட்டக் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை (3ஆம் தேதி) கோத்தகிரி அண்ணா திடலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
நீலகிரி மாவட்ட மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளை முன் வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தேயிலைத் தொழிலாளர்களும், பொது மக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.