உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ, வாரணாசி, பைசாபாத் ஆகிய நகரங்களில் கடந்த 23ம் தேதி அடுத்தடுத்து நீதிமன்றங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் 4 வழக்கறிஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவர் சந்திரமோகன், குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து ஒருநாள் எதிர்ப்புத் தினம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ், செயலாளர் மோகன கிருஷ்ணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் ஊர்வலமாக சென்றனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து, உயர் நீதிமன்றத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதே போன்று எழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த நீதிமன்ற புறக்கணிப்பால் பணிகள் முடங்கின. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.