வரும் கல்வி ஆண்டிலிருந்து கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டிப்ளமோ படித்தவர்களுக்காக நடப்பு கல்வியாண்டில் 3 ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டப் படிப்புகளில் 988 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று பி.எஸ்சி. பட்டதாரிகள் 40 பேர் இவ்விரு பட்டப்படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக நானோ டெக்னாலஜியில், எம்.டெக்., கணிப்பொறி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க் பொறியியல், வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு, ரியல் டைம், எம்பெட்டட் சிஸ்டம் ஆகியவற்றில் எம்.இ., எம்.டெக்., முதுநிலை படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முழு நேரப்படிப்பில் 160 பேரும், பகுதி நேர படிப்பில் 138 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏர்லைன், ஏர்போர்ட் நிர்வாகம், வங்கித் தொழில், காப்பீடு நிர்வாகம், மென்பொருள் திட்டம், தர நிர்வாகம், சில்லரை, விநியோக தொடர் நிர்வாகம், சர்வதேச வர்த்தக நிர்வாகம், பிரான்ட் , நுகர்வோர் தொடர்பு நிர்வாகம் ஆகியவற்றில் தொழில் சார்ந்த எம்.பி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பில் 487 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வருகிற கல்வியாண்டு முதல் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழில் பாட திட்டங்களை உருவாக்க பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் பொன்னவைக்கோ தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. அவர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழ் அறிஞர்களுடன் கலந்து பேசி பரிந்துரைகளை சமர்பிப்பார்.
தொலைதூர கல்வி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படிப்பை தொடர வசதியாக அவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.