''மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தனி செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் படுகொலையை கண்டித்தும், மலேசியாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டதத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற தமிழர்களின் பேரணியில் மலேசிய அரசு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி இனவெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ளது.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய் இருக்கிறார்கள். மலேசிய அரசின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு மலேசியாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும். மலேசியாவை போலவே, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் தமிழர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இது தெரிந்தும் இந்திய அரசு மவுனம் காட்டுவது வேதனையளிக்கிறது.
போலி விசா போன்ற வேறு காரணங்களால் ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளில் சிறையில் அடைபட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். எனவே சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தனி செயல்திட்டத்தை வகுத்திட வேண்டும்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு அளிப்பது பற்றி எந்த வித எச்சரிக்கையும் விட்டதாக நாங்கள் கருதவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பது தவறில்லை. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்குதான் ஆதரவு கொடுக்க கூடாது. ஈழத்தமிழர்களை தார்மீக முறையில் ஆதரித்து கொண்டிருக்கிறோம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.